Monday, July 20, 2009

பட்லா ஹௌஸ் என்கவுண்டர் விவகாரத்தில் முக்கிய திருப்பம்

புது டெல்லி: டெல்லியிலுள்ள பட்லா ஹௌஸில் நடந்த விவாதத்திற்கிடையான என்கவுண்டர் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினை வெளியிட வேண்டும் என மத்திய தகவலறியும் உரிமை கமிசன் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ்( எயிம்ஸ்)க்கு உத்தரவிட்டுள்ளது. தகவலறியும் உரிமை சட்டம் மூலம் மனு சமர்ப்பித்த ஆலம் சாலிஹிடம் அறிக்கையினைக் கையளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.கடந்த 2008 செப்டம்பர் 18 ஆம் தேதி பட்லா ஹவுஸில் வீட்டு எண் எல்.18 ல் இச்சம்பவம் நடந்தது. இதில் ஆதிப் மற்றும் அமீன் என்ற இரு மாணவர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவத்தில் டெல்லி காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டிருந்தார். இம்மூவரின் பிரேத பரிசோதனையை எயிம்ஸ் மருத்துவமனை நடத்தியிருந்தது.ஆதிபும் அமீனும் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் என டெல்லி காவல்துறை கூறுகிறது. ஆனால், அலிகார் பல்கலைகழகத்தில் பயின்று வந்த அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பட்லா ஹவுஸில் நடந்த என்கவுண்டர் காவல்துறையால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட நாடகம் என்றும் அதில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மோகன்சந்த் சர்மாவைக் காவல்துறையினரே அவரின் பின்பக்கமிருந்து சுட்டுக் கொன்றனர் என்றும் பலத்த சர்ச்சை எழுந்திருந்தது.இது தொடர்பாக ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரியில் மாஸ் கம்யூனிகேசன் படித்து வரும் மாணவரான ஸாஹில், தகவலறியும் உரிமை சட்டம் மூலம் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினைத் தனக்கு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன், சம்பவம் நடந்த அன்று பட்லா ஹவுஸிலிருந்து பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வரப்பட்ட சடலங்கள் எத்தனை, கொலை செய்யப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் உடல்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதா? அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா? போன்ற விவரங்களையும் தெரிவிக்க அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.சில மாதங்களுக்கு முன்னரே, பிரேத பரிசோதனை அறிக்கையினை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை கமிசன் உத்தரவிட்டிருந்தது. இதனை, வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என்ற காரணம் கூறி டெல்லி உயர்நீதி மன்றம் தடை செய்திருந்தது. இந்நிலையிலேயே மீண்டும் கமிசன் எயிம்ஸிற்குப் பிரேத பரிசோதனை அறிக்கையினை ஸாஹிலிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.கடந்த 2008 செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி, ஸாஹில் முதன் முதலில் இச்சம்பவம் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கக் கோரி மனு சமர்ப்பித்திருந்தார். எனினும், அன்று காவல்துறையோ எயிம்ஸ் மருத்துவமனையோ அவருக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்தே அவர் மீண்டும் தகவலறியும் உரிமை கமிசனை நாடினார்.தற்போதைய கமிசனின் உத்தரவைத் தொடர்ந்து, ஸாஹிலுக்குப் பிரேத பரிசோதனை அறிக்கையினை வழங்க இன்ஃபர்மேசன் செண்டருக்கு உத்தரவிட்டுள்ள விவரம் அடங்கிய கடிதத்தை எயிம்ஸ் ஸாஹிலுக்கு வழங்கியுள்ளது.இப்பிரேத பரிசோதனைகளை நடத்தியது யார்? பிரேத பரிசோதனை அறிக்கை தயார் செய்தது யார் என்பது போன்ற விவரங்களைப் பாதுகாப்பு கருதி ஸாஹிலுக்கு வழங்கத் தகவல் அறியும் உரிமை கமிசன் மறுத்துள்ளது.பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்த டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்கள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment