Friday, July 24, 2009

மும்பையை இன்று ராட்சத அலை தாக்கும்!-தமிழகத்திலும் கடல் சீற்றம்

Marine Drive in Mumbai
மும்பை: மும்பையில் நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பிற்பகலில் ராட்சத அலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அகற்றப்பட்டு வருகின்றனர்.

மும்பையில், நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகளில் நகருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

மும்பையி்ல 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதற்கேற்ப நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது கடல். கடல் நீர் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கொலாபா, தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

தாராவி, மாஹிம், பார்லே, சயான், சான்டாக்ரூஸ் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது.

பல இடங்களில் கடல் அலைகள் பெரிய அளவில் எழுந்தபடி இருந்தன.

பல இடங்களில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் வெள்ளம் என கடல் நீர் ஓடியது. கொலாபா, கீதா நகர் பகுதியில் புகுந்த கடல் நீரால் பல வீடுகளுக்குள் தணணீர் புகுந்தது. சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெரிய அலைகள் வந்ததில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு மேல் இந்த ராட்சத அலைகள் எழும் எனவும், மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரைக்கு யாரும் போக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர், கடலோரக் காவல் படையினர், கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தித் தாள்கள், டிவி, ரேடியோக்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் விடப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர், கடலையொட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் மக்களை மகாராஷ்டிர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடலோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஒருவித அச்ச நிலை காணப்படுகிறது.

தமிழகத்திலும் கடல் சீற்றம்..

இதற்கிடைய சென்னையிலும் கடல் சீ்ற்றம் மிக அதிகமாக உள்ளது. அலைகள் கரையைத் தாண்டி வருவதால் பட்டினப்பாக்கம் தேவலாயத்தை நீர் சூழ்ந்துள்ளது.

அதே போல மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளிலும் கடல் சீற்றம் மிக அதிகமாக இருந்தது. 40 அடி உயரத்துக்கு அலைகள் கிளம்பியதால் பெரும் பீதி நிலவியது

No comments:

Post a Comment